கொடைக்கானல்: கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் முக்கிய குடியிருப்பு பகுதியாக சீனிவாசபுரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தின் கான்க்ரீட் கலவை சரியாக அமைக்கப்படாததால், மின் கம்பம் எப்போது வேண்டுமானலும் மலைச்சாலையில் சாய்ந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மின் கம்பம் அருகே மத வழிபாட்டு தலங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மேலும் பொதுமக்களின் நடமாட்டமும் அதிகளவில் உள்ள பகுதியாகும்.
இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுக்கு, மலைச்சாலையில் மின் கம்பம் சாய்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் மின்கம்பத்தை சீர் செய்ய மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.