
வீர சிம்ஹா ரெட்டி: மீண்டும் ஆக்ஷன் அதகளம் பண்ணுகிறார் என்.டி.பாலகிருஷ்ணா
100 படங்களை தாண்டிவிட்ட என்.டி.பாலகிருஷ்ணா அதிரடி ஆக்ஷனுக்கு பெயர் போனவர். அவர் நடித்த படங்களில் 80 சதவிகிதம் ஆக்ஷன் படங்கள்தான். அவரது சண்டை காட்சிகள் என்னதான் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டாலும் அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை.
தற்போது அவர் தனது 107வது படத்தில் நடித்து வருகிறார். இதனை கோபிசந்த் மிலினேனி இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கிறார்கள். பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார்.
தற்போது படத்தின் தலைப்பு வீர சிம்ஹா ரெட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டும் இதுவும் பக்கா ஆக்ஷன் படம் என்பதை தெளிவுபடுத்துகிறது. தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.
பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் 'சிம்ஹா' என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு மகரசங்கராந்தி அன்று படம் வெளிவருகிறது.