`ஷூ காலால் எட்டி உதைத்தனர்’ – மீனவர் அளித்த புகாரில் அதிர்ச்சி தகவல்; இந்திய கடற்படை மீது வழக்கு

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை, கண்ணன் என்கிற சுரேஷ், மோகன்ராஜ், தரங்கம்பாடியை சேர்ந்த விக்னேஷ், நாகை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர், பாரத், பிரசாத் ஆகிய பத்து பேர் கடந்த 15-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேல் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவரை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, ராமநாதபுரம் உச்சிப்புள்ளியில் உள்ள விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகளும், சேதமான படகும்,

மேலும் படகில் இருந்த ஒன்பது மீனவர்களையும் இந்திய கடற்படை நாகை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பிறகு நேற்று நள்ளிரவு விடுவித்தனர். அவர்களை வேதாரண்யம் போலீஸார் இன்று காலை நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாகியுள்ள இச்ச சம்பவத்தை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படுகாயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்கி, இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வேதாரண்யம் தமிழக கடலோர காவல் குழும (மரைன்) போலீஸில் மீனவர் செல்வகுமார், தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இந்திய கடற்படை மீது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு துப்பாக்கியால் சுடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள்

அந்த புகாரில், “நான் கடந்த 25 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 15-ம் தேதி காரைக்கால் மேட்டை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு ஐந்து நாள்களாக கடலில் தங்கி மீன்பிடித்து வந்தோம். 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஜெகதாப்பட்டினத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நேவி கப்பல் வந்தது. நாங்கள் இலங்கை நேவி கப்பல் என்று பயந்து வலையின் கயிறை வெட்டி விட்டு வேகமாக புறப்பட்டு வந்தோம். அவர்கள் சத்தம் போட்டார்கள் எங்களது எஞ்சின் சத்தத்தில் அவர்களது சத்தம் எங்களுக்கு கேட்கவில்லை.

உடனே நேவி கப்பலில் இருந்தவர்கள் எங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள். அவர்கள் சுட்டதில் எங்களுடன் மீன்பிடிக்க வந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு குண்டடிப்பட்டதில், தொடை மற்றும் அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் நேவி கப்பல் எங்களது படகை ஒட்டி வந்து விட்டார்கள். அந்தக் கப்பலில் T 65 என எழுதப்பட்டிருந்தது. பின்னர் காயம் பட்ட மீனவருக்கு நேவி கப்பலில் முதலுதவி செய்து, விசைப்படகில் இருந்த எங்கள் அனைவரையும் நேவி கப்பலில் ஏற்றி ‘கைகளை கட்டி என்னடா கடத்துனிங்க என கேட்டு ஷூ காலால் உதைத்து, ஸ்டீல் பைபால் எல்லோரையும் அடித்தார்கள்’ அப்பொழுதுதான் எங்களை துப்பாக்கியால் சுட்டதும், எங்களை அடிப்பதும் இந்தியன் நேவி என்று தெரிந்தது.

மேலும் அவர்கள் எங்களது படகில் ஏதேனும் கடத்தல் பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்கள். பின்னர் ஹெலிகாப்டரை வரவழைத்து காயம்பட்ட மீனவர் வீரவேலை ஏற்றி சென்றனர். எங்கள் போட்டில் எந்த சட்ட விரோத பொருள்களும் இல்லை என உறுதி செய்த பின்னர், எங்களது படகை அங்கேயே நிறுத்திவிட்டு அவர்களது நேவி கப்பலில் எங்கள் அனைவரையும் ராமேஸ்வரம் வரை அழைத்து சென்று, மீண்டும் எங்கள் படகில் ஏற்றி நாகப்பட்டினம் கரைக்கு கொண்டு வந்தனர். எங்களை துப்பாக்கியால் சுட்டு மற்றும் இரும்பு ராடால் அடித்து காயப்படுத்திய இந்தியன் நேவி மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை துப்பாக்கி சூடுச் நடத்தப்பட்ட விசைப்படகு மீனவர்களை நாகை கடற்கரைக்கு இந்திய கடற்படையினர் அழைத்து வந்தனர். “எங்கள் மீது இந்தியன் நேவி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. அவர்கள் பார்ப்பதற்கு இலங்கை நேவி போன்றே இருந்தனர். அதனால் அனைவரும் படகில் ஓரமாக ஒழிந்து கொண்டோம். எங்களுடன் வந்த மீனவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டார். அவர் இறந்துவிட்டாரோ என பயந்து கைகளை தூக்கிவிட்டோம். எங்களை மீறி சென்றால் மீண்டும் சுடுவோம் என எச்சரித்து கூடவே அழைத்து வந்துள்ளனர்” என தங்கள் மீது சுட்ட துப்பாக்கி குண்டுகளை காண்பித்து பதை பதைப்புடன் மீனவர்கள் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் படகு சேதம் அடைந்துள்ளது.

படுகாயம் அடைந்த மீனவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருவதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் இச்சூழலில், இந்திய கடற்படையே அதுபோன்ற கொடூர தாக்குதலை தமிழக மீனவர்கள் நடத்தி இருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.