உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில், கடந்த 16-ம் தேதி முதல் `உலக அளவிலான கராத்தே போட்டி’ நடைபெற்றது. இதில் மலேசியா, தாய்லாந்து, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ‘எய்ம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ சார்பில் 3 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவி பங்கேற்றனர். தனித்தனி வயது மற்றும் எடைப்பிரிவில் பங்கேற்ற இந்த நால்வருமே தங்கப் பதக்கங்களை வென்று விழுப்புரம் திரும்பியுள்ளனர். உலக அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சொந்த மண்ணிற்கு திரும்பியவர்களுக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய அகாடமியின் நிறுவனரும், விழுப்புரம் மாவட்ட கராத்தே விளையாட்டு சங்கத்தின் பயிற்சியாளருமான ரகுராமன், “விழுப்புரம் மற்றும் சென்னையில் உள்ள எங்கள் அகாடமி சார்பில் மொத்தம் 15 பேர் இந்தப் போட்டிக்கு சென்றனர். அதில் மொத்தம் 5 தங்க பதக்கங்களை வென்றிருந்தனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்ற நான்கு பேருமே சொல்லி அடித்தார்போல வென்றிருக்கிறார்கள்.
கொண்டாங்கி எனும் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் சுதர்சன் 35 கிலோ எடை பிரிவிலும், 7-ம் வகுப்பு பயிலும் இளமாறன் 30 கிலோ எடை பிரிவிலும் போட்டியிட்டு தங்க பதங்கத்தை வென்றிருக்கிறார்கள். சுமார் இரண்டரை வருடங்களாக எங்களிடத்தில் பயிற்சியில் இருக்கும் இவ்விரு மாணவர்களும் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் மாநில அளவிலான போட்டி உள்ளிட்ட 15 முக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், 8-ம் வகுப்பு பயிலும் சித்தான் சிவன் 45 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை தேசிய அளவிலான போட்டிகளிலும் வென்றிருக்கிறார்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி பவானி, 40 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்றுள்ளார். இவர்களிடம் நல்ல திறமை இருந்தாலும், குடும்பத்தின் சூழல் சவாலானதாக இருக்கிறது. எனவே, ஸ்பான்சர்ஸ் உதவி கிடைத்தால் அவர்கள் இன்னும் முழு வீச்சோடு செயல்பட உறுதுணையாக இருக்கும்” என்றார்.
’’ஆமா சார்… ஸ்பான்சர்ஸ் கிடைச்சா இன்னும் மேல போவோம்…’’ என்றனர் மாணவர்கள் துடிப்புடன்.
கண்மணிகளுக்கு வாழ்த்துகள்!