Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகிவிடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாகத் தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா?
– Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து…
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது `வாசோமோட்டார் ரைனிட்டிஸ்’ (Vasomotor rhinitis ) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஒவ்வாமையல்லாத ஒருவகையான பாதிப்பு இது.
பொதுவாக, ஒவ்வாமையால் மூக்கடைப்பு, சளி, தலைவலி, சைனஸ் பாதிப்புகள் வரும். ஆனால், சிலருக்கு காற்றின் குளிர்ச்சி, நீரின் குளிர்ச்சி போன்றவற்றால் நாசியில் இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு, மூக்கில் இருக்கும் சிறிய ரத்தக் குழாய்களை விரிவடையும். அதன் விளைவாக ஒருவித அழற்சியும் வீக்கமும் ஏற்படலாம். மூக்கில் அதிகமாக சளி சுரந்து, தும்மல், மூக்கில் அரிப்பு, தலைவலி எனத் தொடர் பாதிப்புகள் உண்டாகலாம்.

இவர்களுக்கு அலர்ஜி பரிசோதனை செய்தால் அனைத்தும் நார்மலாக இருக்கும். இதை `வாசோமோட்டார் ரைனிட்டிஸ்’ என்று அறிந்துகொண்டு தக்க சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். எனவே, உங்களுடைய பிரச்னைக்கு மேலோட்டமாகத் தீர்வு சொல்ல முடியாது. நேரில் பரிசோதித்து தான் பிரச்னையை உறுதிசெய்து, தீர்வுகளையும் பரிந்துரைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.