புதுடெல்லி: FATF-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் சர்வதேச பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு(FATF), தான் சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சேர்க்கும். இந்தப் பட்டியலில், அல்பேனியா, கம்போடியா, ஹெய்தி, ஜமைக்கா, ஜோர்டான், மாலி, மொராக்கோ, மியான்மர், பாகிஸ்தான், பனாமா, பிலிப்பைன்ஸ், தெற்கு சூடான், சிரியா, துருக்கி, உகாண்டா, யேமன் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் நிதி உதவிகளைப் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் நாடுகளில்தான் இத்தகைய குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்பதால், சட்டவிரோத பணபரிவர்த்தனையையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைப்பதையும் தடுத்தால் மட்டுமே அந்த நாடுகள் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் எளிதில் கடன் பெற முடியும். எனவே, இந்த பட்டியலில் உள்ள நாடுகளின் அரசுகள், FATF வலியுறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரே பட்டியலில் உள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக அந்த நாடு கடன் பெறுவதில் பெரும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வந்தது. கிரே பட்டியலில் இருந்து விடுபட பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2018ம் ஆண்டு FATF அளித்தது. இதையடுத்து, FATF குறிப்பிட்டிருந்த நடவடிக்கைகளில் பலவற்றை பாகிஸ்தான் எடுக்கத் தொடங்கியது. எனினும், ஐநாவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபிஸ் சையத், அதன் ஆபரேஷன் கமாண்டர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்பட சில நடவடிக்கைகளை கடந்த ஜூன் மாதம் வரை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. எனினும், FATF வலியுறுத்திய நடவடிக்கைகளில் பலவற்றை பாகிஸ்தான் எடுத்ததை அடுத்து, அந்த நாடு தற்போது கிரே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளையும், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி கிடைப்பதையும் முழுமையாக தடுக்க பாகிஸ்தான் ஆசிய பசுஃபிக் கூட்டமைப்புடன் இணைந்து தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் FATF வலியுறுத்தி உள்ளது.
கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட வெளியறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, ராணுவத் தளபதி கமர் ஜாவெத் பாஜ்வா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், FATF-ன் இந்த நடவடிக்கை காரணமாக கூடுதல் கடன்களை பெற முடியும்.
FATF-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக நிதியுதவி ஆகியவற்றை தடுப்பதற்கான ஆசிய பசுஃபிக் கூட்டமைப்பின் விதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் என்று எண்ணுகிறோம். FATF-ன் நிர்ப்பந்தம் காரணமாகவே, மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாத செயல்கள் நிகழ்வதையும், பயங்கரவாதிகள் நிதியுதவி பெறுவதையும் முழுமையாக தடுக்க, அந்த நாடு நம்பகமான, சரிபார்க்கக்கூடிய, மாற்ற முடியாத மற்றும் நீடித்த நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
பாகிஸ்தானைப் போலவே, நிகராகுவா நாட்டையும் கிரே பட்டியலில் இருந்து FATF விடுவித்துள்ளது. அதேநேரத்தில், மியான்மர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.