"அமைச்சர் `உண்ணாவிரதம் இருப்பேன்' என்பதே திமுக ஆட்சியின் குளறுபடிக்கு சாட்சி..!" – ஆர்.பி.உதயகுமார்

மதுரை ஆதரவற்றோர் காப்பக குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது,

ஆர்.பி.உதயகுமார்

“மதுரையில் மேயரை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதாக அமைச்சரே தெரிவித்திருப்பது தி.மு.க ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளையே காட்டுகிறது.

பருவ மழைக்காலங்களில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தவும், வெள்ளநீர் பாதிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரினோம். ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் புண்ணியத்தில் பத்தாண்டுகள் ஆட்சி செய்துள்ள எங்களுக்கும் புரியவில்லை. ஒரு அமைச்சரே மாநகர மேயரிடம் உண்ணாவிரதம் இருப்பேன் எனக்கூறுவது ஏன் என தெரியவில்லை. அமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தன் கையில் நிர்வாகம் இல்லை எனும் இயலாமையை ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சர் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

அமைச்சரின் இயலாமையா, அரசியலா, உட்கட்சி விவகாரமா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் நிர்வாகம் முடங்கி செயல் இழந்துள்ளது. தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னையால் ஒட்டுமொத்த மதுரை மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

துணைவேந்தர் பதவி குறித்து ஆளுநர் பன்வாரிலால் பேசியது குறித்து தெரியாது. அதற்கு முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். வாடிப்பட்டி அ.தி.மு.க சேர்மன் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பது தெரிகிறது.

கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.பி.உதயகுமார்

மாணவிகளை ரயிலில் பிடித்து தள்ளுகிறார்கள். மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது.

காவல்துறையை சுதந்திரமாக விட்டால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். 30 நாள்களில் 50 கொலைகள் நடக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் முதல்வர் பேச மறுக்கிறார். ரசூல் ஜாய் என்பவர் வெளியிட்டுள்ள முல்லைப்பெரியாறு தொடர்பான குறும்படம் நெஞ்சை பதற்றமடைய செய்கிறது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்னைகள் குறித்துப் பேச முதல்வருக்கு நேரம் இல்லை. அதை கவனிக்க வழியும் தெரியவில்லை.

முல்லைப்பெரியாறுக்கு ஏதேனும் நேர்ந்தால் ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாகிவிடும். கேரளாவுக்குச் சென்று தன்னை தேசியத்தலைவராக காட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்றவரிடம், `முதல்வருடன் சந்தித்தது பற்றிய குற்றச்சாட்டுக்கு ஆதராம் உள்ளாதா என்று ஓ.பி.எஸ் கேட்டிருப்பது’ குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “சாட்சி வைத்துக்கொண்டா சந்திப்பார்கள். துரோகிகள் சந்திப்பதை சாட்சி வைத்துக் கொண்டா சந்திப்பார்கள். சந்தித்தவர்களின் மனசாட்சிக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அதை கூறியுள்ளார். சாட்சி இல்லாமல் நடந்த ரகசிய சந்திப்பைத்தான் நாங்கள் அம்பலம்படுத்தி உள்ளோம்.

ஓபிஎஸ் – அதிமுக

4 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ளவருக்கு இடம் அளித்து, 62 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ளவரின் கோரிக்கைகளை நிராகரிக்க காரணம் என்ன? சட்டமன்ற ஜனநாயகத்தை காலிலே போட்டு மிதிக்கும் வகையில் சபாநாயகர் செயல்படுகிறார். தி.மு.க-வோடு ஜால்ரா அடித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்.

ஹிட்லர், முசோலினி, இடியமினின் மொத்த உருவம்தான் ஸ்டாலின். சட்டசபையில் தலையாட்டி பொம்மைகளைத்தான் வைப்போம் என முதல்வரே சொல்லி உள்ளார்.

மதுரை மேயருக்கு எதிராக அமைச்சர் பி.மூர்த்தி உண்ணாவிரதம் இருப்பேன் என சொல்லியதே இந்த ஆட்சியின் நிர்வாக குளறுபடிக்கு சாட்சி.

கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.பி.உதயகுமார்

மேயருக்கு எதிராக அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பதாக சொன்னால், மக்கள் சாகும் வரை உண்ணாவிரதம்தான் இருக்கவேண்டும். இப்படி இருந்தால், எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.