ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இலை மறை காயாக இருந்து வந்த ஒற்றைத்தலைமை விவகாரத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் போட்டுடைத்தார்.
அன்றில் இருந்து இன்று வரை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்து, அதிமுகவில் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புறம் எடப்பாடி பழனிசாமி, மறு புறம்
தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் மாளிகையை தாக்கியதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார்.
இதில், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக விவகாரத்தை கீழமை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை முற்றிலும் அதிமுகவில் இருந்து ஓரம் கட்ட, எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார். இதை அறிந்த ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இது, எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி அடுத்தக்கட்டமாக மேலும், சில ஆவணங்களை தயார் செய்து கொண்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை நாடியபோது அவரது ஆவணங்களை வாங்க ஆணையம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் தனக்கு எதிரான சூழல் நிலவியதால் டெல்லிக்கு விரைந்து, பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர்களோ ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.
இதில், துளியும் விருப்பம் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக நியமித்து சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர். இதன் காரணமாக அதிமுகவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
அதில் எடப்பாடி பழனிச்சாமி நிமிடத்துக்கு நிமிடம் துப்பாக்கி சூடு குறித்த தகவல்களை பெற்றுக்கொண்டு இருந்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
ஒருபுறம் உச்சநீதிமன்ற உத்தரவு.. பாஜக கோபம்.. தேர்தல் ஆணையம் காட்டம்..சபாநாயகர் அலட்சியம் என இருக்கையில் மறுபுறத்தில் தூத்துக்குடி விவகாரம் மிரட்டுவதால், அதிமுக தன்னை விட்டு போய் விடுமோ? என்கிற அச்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறைந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவு, உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அரசியலை விட்டே, விலகி இருக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
இதை அறிந்து கலங்கிப்போன அவரது ஆதரவாளர்கள், ‘அப்படி எல்லாம் ஒன்று ஆகாது.. தலைவரே.. ஆவணங்களும், அதிமுகவினரும் நம்மிடம் தான் உள்ளனர் என்பதால் தீர்ப்பும் நமக்கு சாதகமாகத்தான் வரும்’ என ஆறுதல் கூறி வருவதாக சேலம் அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்பது, எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால் அவரது ஆசை நடக்குமா? அல்லது அரசியலை விட்டு விலகக்கூடிய சூழல் ஏற்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.