ஆந்திராவில் பயங்கரம்; பட்டாசு கடைகள் தீ விபத்தில் 2 ஊழியர்கள் உடல் சிதறி பலி

திருமலை: ஆந்திராவில் நேற்று காலை பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தீபாவளி பண்டிகையொட்டி 20க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒரு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும் அருகில் அடுத்தடுத்து இருந்த 15, 16, 17 எண்கள் கொண்ட கடைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 கடைகளிலும் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் 15ம் எண் கடையில் வேலை பார்த்த பிரம்மா, காசி ஆகிய 2 ஊழியர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும், 4 கடைகளிலும் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சேதமானது. அப்போது பட்டாசு வாங்க வந்தவர்கள் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். தீப்பிடித்து எரிந்த பட்டாசு கடையின் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதலில் தீப்பிடித்த பட்டாசு கடைக்கு நேற்று முன்தினம் மாலை தான் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விபத்து: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமாலைபேட்டையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.