புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த ஆணையத்தால் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஓபிஎஸ் பொறுப்பு முதல்வராக இருந்தாலும்கூட முழுக் கட்டுப்பாடும் ஒரே ஒரு அமைச்சரிடம்தான் இருந்ததாக ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விளக்கம் கேட்டு, அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓபிஎஸ் மீது குற்றமா? – ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அப்போதைய பொறுப்பு முதல்வராக இருந்த ஓபிஎஸ் கூறியதாக ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு எப்படி ஓபிஎஸ் மீது குற்றம் சுமத்த முடியும்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உள்துறைதான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.