"இந்தாங்க 10 ரூபா, பர்கர் கொடுங்க..!" – சிறுமியை நெகிழவைத்த கடை ஊழியர்

குழந்தைகளின் உலகம் என்பது, நாம் வாழும் இதே உலகின் பொய், திருட்டு, பாகுபாடு, வெறுப்புகள் அற்ற அழகான, அன்பு மட்டுமே நிறைந்த ஒரு தனி உலகமாக இருக்கும். அத்தகைய உலகில், தனக்குத் தேவையான ஒன்றுக்கு அடம்பிடிக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு, ஏதாவது பொருள்மீது ஆசைகொண்டால் அதனைச் சொந்தம்கொள்வதற்கு பணம் வேண்டுமா, பணம் வேண்டாமா அல்லது பணம் வேண்டுமென்றால் எவ்வளவு பணம் வேண்டும் என்றெல்லாம் தெரியாது.

சிறுவர்கள்

அப்படியே பணம் இருந்தால்தான் அதை வாங்கமுடியும் என்று தெரிந்திருந்தாலும், அந்த குழந்தைகளைப் பொறுத்தவரையில் வெறும் பணம் என்று மட்டும் தான் தெரியும், அதைத்தாண்டி வேறெதையும் குழந்தைகள் உற்றுநோக்காது. இதற்கு எடுத்துக்காட்டாகத்தான், உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு சிறுமியின் ரசிக்கத்தக்க வெகுளித்தனமான செய்கை ஒன்று நடந்திருக்கிறது.

அதாவது, நொய்டாவில் பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே உள்ள `பர்கர் கிங்’ கடைக்குள் நுழைந்த சிறுமி ஒருவர், தன்னுடைய பாக்கெட்டிலிருந்த 10 ரூபாயை எடுத்து பர்கர் ஒன்று கேட்டிருக்கிறார். ஆனால், பர்கரின் விலையோ 90 ரூபாய், இது அந்த சிறுமிக்குத் தெரியாது.

10 ரூபாய்க்கு பர்கர் கேட்கும் சிறுமி

இருப்பினும் சிறுமியின் ஆசையைக்கண்ட கடை ஊழியர், தன்னுடைய பாக்கெட்டிலிருந்து 80 ரூபாயை எடுத்து சிறுமியின் 10 ரூபாயுடன் சேர்த்து, பர்கரின் விலையை சரிகட்டி சிறுமிக்கு பர்கரை வழங்கியிருக்கிறார். மேலும் அந்த ஊழியர், பர்கரின் விலையைப்பற்றி சிறுமியிடம் எதுவுமே கூறவில்லை. இதனைக் கடையில் பார்த்துக்கொண்டிருந்த நெட்டிசன் ஒருவர், அந்தச் சிறுமியைப் படம்பிடித்து, அங்கு நடந்த நிகழ்வை அப்படியே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவைக்கண்ட பலரும் ஊழியரின் செயலை பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒரு நெட்டிசன், “மனுஷன் பெருசா நெனைக்ற சந்தோஷத்தோட அதிகபட்ச மதிப்பே குழந்தைங்களோட உலகத்தில 10 ரூபாய் தான்” என கமென்ட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.