தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. தற்போது அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கிவருகிறார். சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார்.
பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக மலையாள ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து பாலாவோ, எலிசபெத்தோ எத்வும் கூறாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் பாலா, “இந்த விஷயம் நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறையும் தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி.
நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னைவிட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை” என்றார்.