வாஷிங்டன்-”தீபாவளி என்பது கலாசாரங்களை கடந்த, உலகளாவிய பண்டிகை,” என, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தீபாவளி பண்டிகையை கடந்த சில நாட்களாக தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகள், தொழில் அதிபர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், தனக்கு நெருக்கமான இந்திய வம்சாவளியினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார்.
இதற்காக அவரது இல்லம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாலிவுட் பாடல்கள் இசைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகளும் நடந்தன; பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தினர்களுக்கு இந்திய இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.
இது குறித்து கமலா ஹாரிஸ் கூறியதாவது:
தீபாவளி என்பது, கலாசாரங்களை கடந்த உலகளாவிய ஒரு பண்டிகை. இருளில் இருந்து வெளிச்சம் பிறப்பது தான், இந்த பண்டிகையின் சிறப்பம்சம்.

ஒரு துணை அதிபர் என்ற முறையில் இதைப் பற்றி அதிகம் யோசித்துள்ளேன்.
நம் நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பல சவால்கள் உள்ளன.
இருள் சூழ்ந்த தருணங்களில் ஒளியை கொடுக்கும் சக்தியின் முக்கியத்துவத்தை தீபாவளி போன்ற பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது.
இளம் வயதில் சென்னையில் தீபாவளி கொண்டாடிய ஞாபகம் இப்போது என் மனதுக்குள் அலைமோதுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்