சூரத்: குஜராத்தில் தீபாவளி பண்டிகையையொட்டு 27ம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேற்று முன்தினம் சூரத்தில் பொதுமக்களிடையே பேசினார். அப்போது அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படமாட்டாது. 21ம் தேதி முதல் 27ம் தேதி ஏழு நாட்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கமாட்டார்கள்.
ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஓட்டுனர் உரிமம் அல்லது வேறு எந்த போக்குவரத்து விதிமீறலாக இருந்தாலும் அதற்கான அபராத தொகையை செலுத்த வேண்டாம். போலீசார் உங்களுக்கு பூங்கொத்து கொடுப்பார்கள். முதல்வர் புபேந்திர படேல் வழிமுறையின் கீழ் உள்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு இந்த சலுகையை வழங்குவதற்கு முன்வந்துள்ளது’’ என்றார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களை கவரும் வகையில் பாஜ தலைமையிலான மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.