கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் மெகா ட்விஸ்ட் -புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட பெண் கைது

டெல்லியில் பெண் ஒருவரை 5 பேர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான பரபரப்பு சம்பவம் வெற்று நாடகம்தான் என்பது அம்பலமாகியுள்ளது.  

டெல்லியை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் உத்தரப்பிரதேசம்  மாநிலம் காசியாபாத்திற்கு சென்றபோது அவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டதாகவும், சாக்கு மூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இச்செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் டெல்லி மகளிர் ஆணையம் தலையிட்டதைத் தொடர்ந்து விவகாரம் சூடுபிடித்தது.

image
இந்த சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரில் கூறப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியது வெறும் நாடகம்தான் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த பெண்ணுக்கும் வேறு சிலருக்கும் நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை அபகரிக்க அப்பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நாடகம் அரங்கேற்றி உள்ளார். தனது எதிர்த்தரப்பை சேர்ந்த 5 பேரையும் சிக்கவைக்க கூட்டு பாலியல் வன்கொடுமை நாடகமாடியுள்ளார்.

image
மருத்துவமனையில் பெண்ணிற்கு பரிசோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த நேரத்தில், அந்தப் பெண் தனது உறவினர்கள் வீட்டில் இருந்ததை, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தனது கூட்டாளிகளான கவுரவ், அசாத், அப்சல் ஆகியோருடன் சேர்ந்து பொய்யாக கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான பரபரப்பு சம்பவம் வெற்று நாடகம் என அம்பலமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: பட்டப்பகலில் பைக்கில் இருந்த பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்! பகீர் சிசிடிவி காட்சிகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.