கோவை: கோவை உக்கடம் பகுதியில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்தவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் இன்று அதிகாலை வந்த கார், வேகத்தடை ஒன்றில் ஏறி இறங்கியது. அப்போது திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது.
இந்த விபத்தை பார்த்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள் கார் தீயில் கருகி, காரில் இருந்தவர் பலியானார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பலியானவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் தீக்கிரையான கார் பொள்ளாச்சி பதிவெண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட முகவரி குறித்து விசாரித்து வருவதாகவும், உயிரிழந்தவர் தற்போது வரை யார் என்பது தெரியாததால், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.