பீஜிங் : சீன அதிபர் ஷீ ஜிங்பிங் மூன்றாவது முறையாக அந்தப் பதவியில் நீட்டிக்கும் வகையிலான தீர்மானம் இன்று நிறைவேற உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு தற்போது நடந்து வருகிறது.
ஒரு வாரத்துக்கு நடக்கும் இந்த மாநாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முடிவெடுத்தபடி, சீன அதிபராக மூன்றாவது முறையாக ஷீ ஜிங்பிங் தொடரும் தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. முன்னதாக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நேற்று நடந்த கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் லீ கேகியாங்க் உட்பட பல முக்கிய தலைவர்கள், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய குழுவுக்கு, 205 நிரந்தர உறுப்பினர்களும், 171 மாற்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு, இன்று நடக்கும் கூட்டத்தில், 25 உறுப்பினர் அடங்கிய அரசியல் குழுவை தேர்ந்தெடுக்கும்.
அந்தக் குழு, ஏழு பேர் அடங்கிய நிலைக் குழுவை தேர்ந்தெடுக்கும். இது தான் கட்சியையும், நாட்டையும் வழிநடத்தும், கட்சியின் பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க உள்ளது. இந்தத் தேர்தலில், ஷீ ஜிங்பிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
அணு ஆயுதக் குவிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை அதிபர் ஷீ ஜிங்பிங் சமீபத்தில் துவக்கி வைத்தார். அப்போது பேசுகையில், ‘நாட்டில் மிக வலுவான அணு ஆயுத தடுப்பு முறைகள் உருவாக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.தற்போது, ஷீ ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தொடர உள்ள நிலையில், அவரது இந்தப் பேச்சு, சீனா அதிக அளவில் அணு ஆயுதங்களை குவிக்க முடிவு செய்துள்ளதை உணர்த்துகிறது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement