செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொதுமக்களுக்கு செய்திக்கு குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு மிகவும் சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.
தற்காலிகமாக உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு தயாரிக்கும் போது, கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது. உணவை செய்பவர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாத வண்ணம் பணியில் அமர்த்தப்படவேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது.
விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் உள்ளிட்டவையை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும். உணவுபொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.
பண்டிகைகாலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in இணையதளத்தில் தங்களது பதிவு செய்த உரிமத்தைப் பெற்று கொள்ளவேண்டும். மேலும் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.