தற்கொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகளை கூறும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில மனநல நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பூர்ண சந்திரிகா: முன்பெல்லாம் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றால், தீர்த்து வைப்பதற்கு வீட்டில் பெரியவர்கள் யாராவது இருப்பர்; இன்று அப்படி இல்லை.
அதனால், ‘ஆன்லைன் கேம் லிங்க் பிக்சர்’ அனுப்பி ஆபாச படத்தில் மாட்டிக் கொள்வது, ‘லோன்லி’யாக இருப்பதைக் கூறி, கம்பெனி தருவதாக சொல்லும் நபர்களிடம் ஏமாந்து சிக்கிக் கொள்வது போன்றவை நிகழ்கின்றன.
அப்படி சிக்கியவர்கள், ‘நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்; தற்கொலை செய்து கொள்கிறேன்…’ என்று, தவறான வழியில் மனதை செலுத்துகின்றனர்.
எத்தனை பெரிய பிரச்னை என்றாலும், அதற்கு தற்கொலை தீர்வு அல்ல. எனவே, மன அழுத்தம், சங்கடம், விரக்தி ஏற்படும் போது, தயங்காமல் இலவச தொலைபேசி எண், ‘104’ஐ தொடர்பு கொண்டு பேசலாம்; இதன் வாயிலாக, தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் மனநல மருத்துவர்கள், மனநல காப்பகங்கள் இருக்கின்றன. அவர்களை அணுகியும், தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு பிரச்னை இருந்தால், அவருக்காக வேறு ஒருவர் வந்து அரசு மருத்துவரை சந்தித்து தீர்வு கேட்டு, பின் தேவையான நடவடிக்கையில் இறங்கலாம். மனநல மருத்துவரை சந்திப்பதற்கு தயங்க வேண்டியதில்லை; அனைத்து ரகசியங்களும் பாதுகாக்கப்படும்.
ஏற்கனவே, தற்கொலை முயற்சி செய்தவர்கள் கண்டிப்பாக ஆலோசனை பெற வேண்டும். மனதில் சங்கடம், சிக்கல் உள்ள அனைவருக்கும், உதவ மருத்துவர்கள் தயாராக இருக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement