புதுடெல்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சவுதி இளவரசர் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா சென்ற போது, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பிரதமர் மோடி எழுதிய அழைப்பிதழ் கடிதத்தை கொடுத்தார். இதனை ஏற்று கொண்ட அவர், இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு செல்லும் முன், நவம்பர் 14ம் தேதி இந்தியா வர உள்ளார். அன்று காலை இந்தியா வரும் இளவரசர் முகமது பின் சல்மான் அதே நாளில் இந்தோனேசியா செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசரின் வருகையையொட்டி அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அப்போது ஓபெக் கூட்டமைப்பின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவு குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி மற்றும் மின்துறை அமைச்சர் ஆர்கே. சிங் ஆகியோரை சந்தித்தார்.