வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதன்படி நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.

ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த வாரத்துக்குள் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தத் தேர்தலில், கட்சியின் 1.70 லட்சம் பிரதிநிதிகள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்கு முன், நாளைக்குள்(அக்.,24) தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது இறுதி செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ரிஷி சுனாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் பிரிட்டன் ஒரு சிறந்த நாடு. ஆனால், நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம். அதனால் தான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், உங்களின் அடுத்த பிரதமராகவும் நிற்கிறேன். நமது பொருளாதாரத்தை சரி செய்யவும், நமது கட்சியை ஒன்றிணைக்கவும் நம் நாட்டிற்கு உழைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement