புதுடில்லி : தமிழகத்தின் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தலைவராக டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான டாக்டர் வி.நாகராஜன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகி, 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2019 ஜனவரி 27ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் கட்டுமானப்பணிகள் இன்னும் துவங்கவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான வகுப்புகள் நடக்கின்றன.
இந்நிலையில், மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமித்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை ஆற்றல்சார் பேராசிரியராகவும், கர்நாடகாவின் பெங்களூரு தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் நாகராஜன் தற்போது பதவி வகித்து வருகிறார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நெறிமுறை குழு தலைவராகவும், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மா’வின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் நாகராஜன் செயல்படுகிறார்.
எய்ம்ஸ் தலைவராக நியமித்திருப்பது குறித்து டாக்டர் நாகராஜன் கூறியதாவது:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளர்ச்சிக்கு என்னை ஒரு கருவியாக நியமித்த மத்திய அரசுக்கு நன்றி. கட்டுமானம், பணியாளர் தேர்வு உட்பட அனைத்திலும் தீவிர கவனம் செலுத்துவேன்.
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே இணக்கத்துடன் செயல்பட்டு, புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் தரம் உயர்த்துவேன்.
இந்த மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்