புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த மூன்று மாதங்களில் 66 குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள்தான் குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியது.
உலக அளவில் மருந்துத் தயாரிப்பில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனத்தின் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது, இந்திய மருந்துத் துறை மீதான சர்வதேச மதிப்பைக் குறைத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:
தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்படுவது என்பது ஒரு நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியது. இந்திய மருந்துத் துறை மீதான மதிப்பை காப்பாற்றுவதற்கும், சர்வதேச அளவில் மருந்துத் தயாரிப்பில் முன்னணி நாடாக நீடிப்பதற்கும் இந்தியா வலுவான தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பது மிக அவசியம். தற்போது தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அதை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார்.