விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மனைவி தங்கமயில். இவர் அண்மையில் எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தான் மின்வாரியத்தில் 2009 வரை பணியாற்றி ஓய்வு பெற்றேன். பின்னர் 2017 முதல் ஒப்பந்த அடிப்படையில் மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன்.
இதனிடையே எனது தந்தைக்கு பழக்கமான டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கரன் கடந்த 2019ல் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது என் தந்தை கலியமூர்த்தியிடம் மின்வாரியத்தில் கேங்மேன் மற்றும் உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும், தனக்கு அரசியல் பிரமுகர்களிடம் நல்ல தொடர்புள்ளதால், அந்த பணியிடங்களை வாங்கி தருவதாக தெரிவித்தார். அவரது ஆசை வார்த்தைகளை நம்பி ஒவ்வொரு நபருக்கும் ரூ. 3 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தையும் நம்பினார்.
அதன்படி எனது தந்தை கலியமூர்த்தி மற்றும் அவரது கீழ் பணிபுரியும் 70 பேரிடம் ரூ. 94.50 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தருவதாக சங்கரன் கூறினார். பல ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தரவில்லை. 2020ல் எனது தந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு சங்கரன் எனது வீட்டிற்கு வந்து அனைத்து நபர்களுக்கும் கண்டிப்பாக வேலை வந்து விடும் என கூறினார், அதன்படி 2020ல் வேலை நியமனம் வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் வேலை வழங்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து பல தவணைகளாக ரூ. 24.50 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதமுள்ள ரூ. 70 லட்சம் தராமல் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத் தருமாறு கூறியிருந்தார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் சங்கரன், அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்ப்பதும், விழுப்புரம் மாவட்ட பாஜ கல்விப்பிரிவு நிர்வாகி என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.