மதுரை: முல்லைப்பெரியாறுக்கு எதிரான குறும்படத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் அதிமுக ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணாவின் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர். இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்று ஆய்வு செய்தார். இதன்பின், செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் பாதுகாப்பு இல்லை. ஏற்கெனவே வாடிப்பட்டியில் அதிமுகவைச் சேர்ந்த சோணை இல்லம் மற்றும் வணிக நிறுவனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டுசென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக 30 நாட்களில் 56 கொலைகள் என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டினர், ஆனால் அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் காரணம் கூறுகின்றனர்.
சட்டமன்றத்தில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு யாரும் கேள்வி கேட்கவில்லை. வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் மூர்த்தி மேயர் மீது பழியை சுமத்தி தன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். அமைச்சர் 10 தொகுதிக்கும் உத்தரவிட முடியும், அதிகாரிகள் கேட்பார்கள். மக்களை ஏமாற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். அவரது பேச்சு எல்லாமே நகைச்சுவையாக உள்ளது.
முல்லைப் பெரியார் அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தற்போது வெளியான ‘சைன் ஆப் காட்’ குறும்படத்தை கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோய் வெளியிட்டுள்ளார். இதற்கு கேரளா அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசும் விழிப்புடன் இருந்து அப்படத்தை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.