புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து உருவான ஜனதா கட்சிபின்னர் உடைந்ததில் மாநில வாரியாக புதிய கட்சிகள் உருவாகின. உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியும் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையில் சமாஜ்வாதி ஜனதா தளம் கட்சியும் உருவாயின. அஜீத் சிங் தலைமையில் ராஷ்ட்ரிய லோக் தளம் உருவானது.
இதுபோல் பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் உருவாயின. இந்தக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒன்றிணைய கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், பிஹாரில் ஆர்ஜேடி, ஜேடியு கட்சிகள் மட்டும் மீண்டும் இணைந்து புதிய கட்சியாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் கடந்த ஆண்டு பாஜகவுடன் இணைந்து தேர்தலில் வென்ற நிதிஷ் குமார், மீண்டும் முதல்வரானார். இவர் கடந்த ஆகஸ்டில் பாஜகவை விட்டு விலகி மீண்டும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார். இந்தச் சூழ்நிலையில், பிஹாரில் பாஜகவின் மிரட்டலை எதிர்கொள்வதுடன், 2024மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் தொகுதிகளை கைப்பற்ற லாலுவும் நிதிஷும் திட்டமிடுகின்றனர். இதன் முதல்கட்டமாக ஒருபுதிய தீர்மானத்துடன் ஆர்ஜேடிஅமைப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 10-ல் டெல்லியில் கூடிய ஆர்ஜேடி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் லாலு 12-வது முறையாக கட்சியின்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய கட்சியின் பெயரை குறிப்பிடாமல் ஆர்ஜேடியை கலைத்து அதன் தேர்தல் சின்னமான லாந்தர் விளக்கையும் கைவிட ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. இதுபோல் ஜேடியு கட்சியும் கலைக்கப்பட்டு அதன் வில் அம்பு சின்னம் கைவிடப்படும் என தெரிகிறது. இதன் பிறகு 2 கட்சியினரும் இணைந்து, புதிய தேர்தல் சின்னம் பெற திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி நிதிஷ் குமார் முதல்வர் பதவியை லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்விக்கு விட்டுத்தரும் வாய்ப் புகள் உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நிதிஷ், தேசிய அரசியலில் தீவிரமாக இறங்க உள்ளார். இதன்மூலம், இரு கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 123 ஆக உயரும். இது பெரும்பான்மையை விட அதிகமாகும்.
ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஜேடியு கட்சியிலிருந்து பிரிந்தவருமான சரத் யாதவ் தனது புதிய கட்சியை ஏற்கெனவே லாலுவின் கட்சியில் இணைத்தது நினைவுகூரத்தக்கது.