திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மகள் விஷ்ணு பிரியா (23). இவர் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். விஷ்ணு பிரியாவின் தந்தையின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர். இதனால் விஷ்ணு பிரியா மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் அவரது தாய் வீட்டுக்கு வந்தபோது படுக்கையறையில் விஷ்ணு பிரியா கழுத்து துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து பானூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஷியாம்ஜித் (27) என்பவரின் போனில் இருந்து விஷ்ணு பிரியாவின் போனுக்கு கடைசியாக அழைப்பு வந்தது தெரியவந்தது. ஷியாம்ஜித்திடம் விசாரித்ததில், விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்றதாக அவர் போலீசிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
