வாழப்பாடி அருகே பயங்கரம் ஆடு மேய்க்க சென்ற விவசாயி காட்டிற்குள் சுட்டுக்கொலை: வேட்டை கும்பலிடம் விசாரணை

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை பெரியகுட்டிமடுவு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (58), விவசாயி. இவர் நேற்றுமுன்தினம், தான் வளர்க்கும் ஆடுகளை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக ெகாண்டு சென்றார். மாலை 4 மணியளவில் காட்டிற்குள் பெருமாள், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி சரளா, மகன்கள் மாரப்பன், பழனிசாமி மற்றும் உறவினர்கள் பெருமாளின் உடலை மீட்டு, வீட்டிற்கு கொண்டு வராமல் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இதனை அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அதில் உறவினர்கள் தரப்பில், ஆடு மேய்க்க சென்ற பெருமாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனக்கருதி, சனிக்கிழமை என்பதால் வீட்டிற்கு சடலத்தை கொண்டு வராமல், அப்படியே எடுத்துச் சென்று தகனம் செய்துவிட்டோம்,’’ எனத்தெரிவித்தனர்.

தீவிரமாக விசாரணை நடத்தியதில், அதேபகுதியை சேர்ந்த வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் காட்டிற்கு வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றதாகவும், அவர்கள் விலங்குகளை வேட்டையாட சுட்டபோது, பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என கருதுகின்றனர். அதனால், வேட்டைக்கு சென்ற வெங்கடாசலம் உள்ளிட்டோரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.