புதுடில்லி : ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி, தம்பதியின் அந்தரங்கத்தை ‘வீடியோ’ எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நொய்டாவில் உள்ள ‘ஒயோ’ நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றில், ஒரு தம்பதி அறை எடுத்து தங்கினர். மறுநாள் காலை அவர்களின் மொபைல் போனுக்கு ‘வீடியோ’ ஒன்று வந்தது.
முதல் நாள் இரவு ஹோட்டல் அறையில் அவர்கள் அந்தரங்கமாக இருந்தது வீடியோ எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களின் மொபைல் போனை தொடர்பு கொண்ட ஒருவர், ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்ததாகவும், பணம் தராவிட்டால் அதை இணையதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்த தம்பதி நொய்டா போலீசாரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விஷ்ணு சிங், அப்துல் வஹாப், பங்கஜ் குமார், அனுராக் குமார் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து லேப்டாப், சிம் கார்டுகள், ரகசிய கேமராக்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர்.
இந்தக் கும்பல் நாடு முழுதும் ஒயோ ஹோட்டல்களில் இது போன்ற செயல்களை செய்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல் தலைவனை, நொய்டா போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து ஒயோ நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement