கோவை மாவட்டம் கிட்டாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் இருந்து வருகிறது.
இந்த வவ்வால் இனங்களை பாதுகாக்க 22 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த அரியவகை வவ்வால்களை இந்த கிராம மக்கள் புனிதமாகவும் கருதி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது,
இந்த அரியவகை வவ்வால்களை பாதுகாக்க கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. இந்த வவ்வால் இனங்களை பாதுகாக்க இங்கு சரணாலயம் அமைக்க ஊர் பொதுமக்கள் சார்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
அரசு அதற்கு நடவடிக்கை எடுத்து சரணாலயம் அமைக்க வேண்டும். அப்போது வவ்வால்கள் அதிகளவில் இனப்பெருக்கம் ஆகும். அப்பொழுதுதான் இந்த அரிய வகை வவ்வால் இனங்கள் பற்றி கோவை மக்கள் அல்லாமல் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.
எனவே நாங்கள் புனிதமாக மதிக்கும் வவ்வால்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்த வவ்வால்களுக்காக பொதுமக்கள் ஊராட்சியுடன் இணைந்து மரங்கள் வளர்க்கப்பட்டு, குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.