பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட் ‘எல்விஎம்- 3’ 36 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வர்த்தக ரீதியாக இஸ்ரோ செலுத்திய முதல் ராக்கெட் இதுவாகும். உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனம் வர்த்தக ரீதியான இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அரசு, கல்வி, வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பணியை ஒப்படைத்தது. இந்த 36 செயற்கைக்கோள்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.07 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் 3’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதன்பிறகு, விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‘இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி. 36 செயற்கைக்கோள்களில் 16 வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் பிரிக்கப்படும். தரவு சிறிது நேரம் கழித்து வரும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்’ என்றார். முதல்முறையாக வர்த்தக ரீதியாக அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.