கொரியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் பொருட்களை மலிவான விலைக்கு பெற்றுத்தருவதாகக் கூறி, முகநூல் Facebook பக்கத்தில் விளம்பரம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதுடைய இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 19ஆம் திகதி டிஜிட்டல் தடயவியல் கணினி ஆய்வகத்தின அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இணையத்தள வடிவமைப்பாளர் உதார சாமிக்க என்பதுடன், ஹபராதுவ அலுகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான இந்த சந்தேக நபர், குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் ஆவலுடன், ஆர்டர் செய்த பொருட்களுக்கான பணத்தை வரவு வைப்பதற்காக தொடர்புகொண்ட நபர்களுக்கு வங்கி கணக்கு இலக்கத்தை கொடுத்து 6 மாதங்களாக இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.
சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் இருப்பதனால் ஏமாறிய மக்கள் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் பணத்தை வரவு வைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்தேகநபரின் மோசடியில் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக சுமார் 100 பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.