தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான விவாதங்கள் எழுந்துள்ளன. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியை விரட்டிய தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜகவினர் மனப்பால் குடிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 221ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜக சார்பில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழை காக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பபட்டது.
அதற்கு பதிலளித்த வைகோ, “இந்தியை விரட்டிய இந்த தமிழ்நாட்டு மண்ணில், காலூன்றிவிடலாம் என்ற மனப்பால் குடித்தவாறு பாஜகவினர் இந்திக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று சொல்வது வெட்கக்கேடானது, அவமானகரமானது. தமிழர்கள் இதை பொருத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.” என்றார்.
தமிழர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வைகோ, இந்தியை எதிர்த்து போராடிய களங்கள் ஒருபோதும் வீண்போகாது. மீண்டும் அந்த களங்கள் வரும். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாஜக இந்த நாடகத்தை நடத்துகிறது என்றும் சாடினார்.
ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு தலையிட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்றார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக தாக்கப்பட்டவர்கள் மீது ஆந்திர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் வைகோ கண்டனம் தெரிவித்தார்.