உயிர் பலி கேட்கும் மழைநீர் வடிகால்கள்: இறையன்பு பிறப்பித்த உத்தரவு!

மழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து சென்னையை பாதுகாத்திடும் நோக்கின் சென்னையின் அத்தனை தெருக்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. திட்டமிட்டபடி குறித்த காலத்துக்குள் பல்வேறு இடங்களில் பணிகள் நிறைவடையாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், கான்கிரீட் கம்பிகள் ஆகியவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.

அயனாவரம் ஐ.சி.எஃப் அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்சாரம் தாக்கி இரு தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில் தற்போது நேற்று மற்றொரு துயர சம்பவம் நடைபெற்றது. இளம் ஊடகவியலாளர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று அண்ணாநகர், அடையார், ராயபுரம் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதை இரு துறைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடிகால் அமைக்கப்பட்ட இடங்களில் வடிகால் மற்றும் சாலை ஆகியவற்றுக்கு இடையே மேடு, பள்ளங்கள் இல்லாதவாறு சரி செய்ய வேண்டும். அதிக அளவில் மழைநீர் வழிந்தோட தூர் பள்ளங்களை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.