புதுடெல்லி: தன்னார்வத் தொண்டு நிறுவனமான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சோனியா காந்தி குடும்பத்துக்குத் தொடர்புடைய தொண்டு நிறுவனமாகும். இந்த அரசு சாரா நிறுவனம், விதிமுறைகளை மீறியும், சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த உண்மை, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2020-ல் அமைத்த குழு நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த தன்னார்வ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த எஃப்சிஆர்ஏ உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைத் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளார். மேலும், அந்த தன்னார்வ அமைப்பின் அறங்காவலர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் உள்ளனர்.
1991-ல் தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2009-ம் ஆண்டு வரை, கல்வி, சுகாதாரம்,அறிவியல், தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமானோருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.