எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.கைதிகள் விடுதலை தொடர்பான ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபர் ஆகியோரின் கருத்து பெறப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த தமிழ் கைதிகளில் மூவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்தை வினவியுள்ளதோடு அவரின் இணக்கப்பாட்டுடன், இவர்களின் விடுதலைக்கு தேவையான ஆரம்ப கட்ட முன்னெடுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 04 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியுள்ள தண்டனை காலத்தைக் குறைத்து இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த மற்றுமிரு தமிழ் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளதுடன் மேலும் இரு கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.