எத்தனை மணி முதல்? எவ்வளவு நேரம்? ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாளைய தினம் (அக்டோபர் 25) சூரிய கிரகண நிகழ்வு நடைபெறவுள்ளது. மாலை 4.29 மணிக்கு தொடங்கி 5.42 வரை நீடிக்கும். சூரியன், பூமி ஆகியவற்றுக்கு இடையில் நிலா வரும் போது சூரியனை நம்மால் பார்க்க முடியாது. இதையே சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். நடப்பாண்டின் கடைசி மற்றும் 2வது சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. அதுவும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயில் நடை மூடப்படுகிறது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பே கோயில் மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னர் திறக்கப்படும். அதாவது, காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் கோயில் திறக்கப்பட்டு முழுவதும் சுத்தம் செய்யப்படும். அதன்பிறகே ஏழுமலையான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய் தரிசனம், சிறப்பு தரிசனத்திற்கான பரிந்துரை கடிதம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு சர்வ தரிசனம் என்று அழைக்கப்படும் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கே அனுமதி அளிக்கப்படும்.

அதாவது அலிபிரியில் இருந்து திருமலை வரை நடந்து செல்பவர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்கலாம். அதுமட்டுமின்றி அன்னதானமும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கேற்ப பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிரகணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்று சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது, தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது வழிபாட்டில் அதிக நேரம் செலவிட வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்ல வேண்டும். அதேசமயம் வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்க வேண்டும். கிரகணம் முடிந்தால் குளித்து விட்டு தான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

கிரகண நேரத்தில் எந்தவித சுப காரியங்களும் செய்யக் கூடாது. பயணம் செய்வதை தவிர்க்கலாம். சமைக்கவும் கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள் கூர்மையான பொருட்களை தொடக் கூடாது. எச்சரிக்கையாக வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.