கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளியூர் அருகே உள்ள கன்னிமாறன் ஓடையில் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கன்னிமாறன் ஓடையில் குளிப்பதற்காக 11 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 15 பேர் சென்றுள்ளனர். அப்பொழுது தண்ணீர் குறைவாக இருந்ததால் அனைவரும் கன்னிமாறன் ஓடையைக் கடந்து மறு கரைக்கு சென்று குளித்துள்ளனர்.
அப்பொழுது திடீரென ஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் கரையின் மறுபக்கம் சிக்கியுள்ளனர். மேலும் ஒருவர் மட்டும் வெள்ளத்தின் நடுவே பாறையில் சிக்கி தவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வள்ளியூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.