கடற்படை துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் மருத்துவ கண்காணிப்பில் மயிலாடுதுறை மீனவர்

மதுரை: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் ஒரு படகில் ராமேஸ்வரம் – கோடியக்கரை கடல்பகுதியில் கடந்த 21ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் சந்தேகமடைந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரவேல் (32) என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

அவருக்கு, 24 மணி நேரமும் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘பெல்லட் ரக குண்டுகள் மீனவர் உடலில் அடிவயிறு, இடதுபக்க தொடையில் பாய்ந்திருந்தன. இந்த வகை குண்டுகள் பட்டாசு வெடி வெடிப்பது போல்தான். வயிற்றில் பட்டாசு வெடித்தால் எப்படி இருக்குமோ அந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

காயம்பட்ட இடங்களில் கரித்தூசுகள், துகள்கள் அப்பி இருந்தன. அவற்றை நீரில் கழுவி சுத்தம் செய்து அகற்றி, காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடந்த அறுவை சிகிச்சையில் வயிறு, தொடை பகுதிகள் சரிசெய்யப்பட்டன. தற்போது சகஜநிலையில் உள்ள மீனவர் வீரவேலுக்கு நரம்பியல், ரத்தநாளங்கள் உள்ளிட்ட 7 மருத்துவ பிரிவு துறை நிபுணர்களின் 24 மணி நேர கண்காணிப்பில்  சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை தரப்படுகிறது ’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.