“கவுண்டமணி சாரோடு சேர்ந்து நடிப்பேன்!”

“நீங்க ஏன் புது இயக்குநர்கள் படமாகவே போயிடுறீங்கனு பலரும் என்கிட்ட கேட்பாங்க. நிறைய புது இயக்குநர்கள் என்கிட்ட கதை சொல்ல வர்றாங்க. நான் எதிர்பார்க்கற வித்தியாசமான கதைகளாகவும் அமையுது. அவங்களோட ஒர்க் பண்றது எனக்கும் தோதுவானதா இருக்கு. ஏற்கெனவே ஹிட் கொடுத்து வரும் இயக்குநர்களோட படம் பண்றப்ப, எதிர்பார்ப்பு ஜாஸ்தியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி நானும் என்னைத் தயார் பண்ணிக்க வேண்டியிருக்கும். ஏன்னா அறிமுக இயக்குநர்களோட பண்றதை விட பத்து மடங்கு கூடுதலா பண்ணினால்தான் பெரிய இயக்குநர்களோட படங்கள்ல எடுபடும். ஆனா, புது இயக்குநர்கள் எனும் போது ஆடியன்ஸுக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது. சந்தானம் இதுல என்ன பண்ணியிருக்கார்னு மட்டும்தான் பார்ப்பாங்க…’’ அக்மார்க் சிரிப்புடன் அம்சமாக வரவேற்கிறார் சந்தானம். ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, ‘கிக்’ என அவர் நடித்து முடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இப்ப கவுண்டமணி வீட்டு தெருவிலேயே நீங்களும் குடிவந்துட்டீங்க.. என்ன சொல்றார் கவுண்டமணி?

“நான் விஜய் டி.வி.யில் ஒர்க் பண்றப்பவே செனடாப் ஏரியாவை ரொம்ப பிடிக்கும். கவுண்டமணி சார் அங்கேதான் இருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். அண்ணனோட பயங்கரமான ரசிகன் நான். ரெண்டு, மூணு தடவ சந்திச்சிருக்கேன். அப்போதிலிருந்தே செனடாப் ரோடு ஏதோ ஒரு வகையில இம்ப்ரஸ் பண்ணிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில அவர் வீட்டுக்கு பக்கத்துலேயே எனக்கு வீடு அமைஞ்சது. அவர் என் கார் டிரைவரைப் பார்த்தால், ‘என்னப்பா, தம்பி இருக்காரா’னு கேட்பார். நானும் அவர் டிரைவரை பார்த்தால், ‘சார் எப்படி இருக்காங்க’னு கேட்பேன். மறுபடியும் அவரை நடிக்கக் கூப்பிட்டிருக்கேன். அவருக்கான கேரக்டர் செட்டானா, அண்ணனோடு நடிக்கவும் விரும்புறேன்.’’

இப்ப வர்ற படங்கள்லேயும் எமோஷன், டான்ஸ்லயும் அசத்த ஆரம்பிச்சிட்டீங்களே?

“நன்றிங்க. முன்னாடி எனக்கு எமோஷனல் வராதுனு சொல்லியிருக்காங்க. ஆனா, அந்தப் பெயர் ‘சபாபதி’, ‘குலுகுலு’வுல காணாமல் போயிடுச்சு. எமோஷனல் சீன்களும் அழகா பண்ணத் தெரியும்னு ஆடியன்ஸ்கிட்ட பெயர் வாங்கியிட்டேன். அதைப் போல டான்ஸ், ஃபைட் ரெண்டிலும் கவனம் செலுத்துறேன். ஏன்னா, என் படத்தை ஆடியன்ஸ் பார்க்கறப்ப ‘இவர்தான் ஹீரோவா.. இவருக்குத்தான் அதெல்லாம் வரலீயே.. பிறகு ஏன் ஹீரோவா பண்ணியிருக்கார்?’னு எந்த இடத்துலேயும் தோணிடக் கூடாது என்பதாலேயே இப்ப ஒவ்வொன்னையுமே திருப்தியா ரொம்ப கவனமா பண்ணிட்டிருக்கேன்.’’

இப்ப நடிக்கற படங்கள்..?

“ ‘குலுகுலு’வுக்கு பிறகு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, ‘கிக்’னு ரெண்டு படங்கள் முடிச்சிட்டேன். அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. இதுல ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’வோட ரீமேக் ஆகும். இதை ரீமேக்கா இல்லாம நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாத்தியிருக்கார் இயக்குநர். எமோஷனல் க்ரைம் த்ரில்லரா வந்திருக்கு. படத்துல ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஒரிஜினலில் பண்ணின மனோஜ் பீதாவே, இந்தப் படத்தையும் இயக்கி யிருக்கார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைச் சிருக்கார். அடுத்த மாசம் ரிலீஸ் ஆகும்.

இன்னொரு படமான ‘கிக்’கை கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கி யிருக்கார். ஏற்கெனவே இவர் கன்னடத்தில் ‘லவ் குரு’, ‘கானா பஜானா’, ‘ஆரஞ்ச்’னு படங்கள் இயக்கினவர். வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் கிக் தான்னு உணர்த்துற படமா இருக்கும். பெங்களூர், சென்னை, பாங்காக்னு படப்பிடிப்பு நடந்திருக்கு. பிரமானந்தம் சார் காம்பினேஷன்ல நான் நடிச்சிருக்கேன். அப்புறம், என் டீமில் உள்ள முருகானந்தம் இயக்கத்தில் ஹாரர் காமெடி ஒண்ணு பண்ணப் போறேன். இதுதவிர ரெண்டு கதைகள் கேட்டு வச்சிருக்கேன். அதுல ஒண்ணு ரொமான்ஸ் காமெடி.. இன்னொண்ணு ஃபேன்டஸி படமா இருக்கும்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.