காரில் இருந்த சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி: கோவையில் பயங்கரம் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் சிதறி கிடந்தது: விசாரிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

கோவை: கோவையில் கோயில் முன்பு நேற்று அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்து துணி வியாபாரி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.  
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயிலும், அதற்கு முன் விநாயகர் கோயிலும் உள்ளது. நேற்று காலை 4 மணியளவில் TN 01 F 8163 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார்  சங்கமேஸ்வரர் கோயில் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அக்கம் பக்கத்தினர் அங்கே  சென்று பார்த்தபோது காரின் வெளியே ஒருவர் தீயில் எரிந்து கொண்டிருந்தார். குடியிருப்பு பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ சுமார் 12 அடி உயரத்திற்கு எரிந்தது. அருகே செல்ல தயங்கிய மக்கள், தீயின் தாக்கம் குறைந்ததும் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து தீயை அணைத்தனர்.

இதற்கிடையே தெற்கு தீயணைப்பு துறையினரும் சென்று தீயை அணைத்தனர். காரின் வெளியே  மர்ம நபர் ஒருவர் உடல் கருகி குப்புற விழுந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகே 50க்கும் மேற்பட்ட சிறிய பால்ரஸ் குண்டுகள், இரும்பு குண்டுகள், அலுமினிய ஆணிகள், கண்ணாடி கோலி குண்டுகள் சிதறிக் கிடந்தன. கோயில் முன் பகுதியில் உள்ள பூக்கடை சேதமாகியிருந்தது. காரின் பின் பகுதி முழுவதும் எரிந்துவிட்டது.  இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காரின் பின் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கான 2 காஸ் சிலிண்டர்கள் இருந்தன. இதில் ஒரு சிலிண்டர் காஸ் திறந்து வெடித்திருப்பதாக தெரிகிறது. இன்னொரு சிலிண்டர் வெடிக்கவில்லை. இந்த சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் சென்னையில் இருந்து கோவை வந்தனர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். சென்னையில் இருந்து தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். வெடித்த கார் மற்றும் சிதறி கிடந்த பாகங்களை சேகரித்து தடய ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

காரில் வெடிகுண்டு ஏதாவது இருந்திருக்கலாமோ? என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் சோதனையில்தான் அந்த தகவலை உறுதி செய்ய முடியும் என கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் சிறிய பால்ரஸ் குண்டுகள், ஆணிகள், கோலி குண்டுகள் கிடந்ததால் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இறந்த நபர் யார்? என முதலில் தெரியாமல் இருந்தது. தீவிர விசாரணையில் இறந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ஜமேஷா முபின் (25) என தெரியவந்துள்ளது. இவரிடம் ஏற்கனவே 2019ல் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவர் ஓட்டி வந்த கார் 4 பேருக்கு விற்பனை செய்யப்பட்டு 5வதாக இன்னொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
பொள்ளாச்சியில் கார் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. காரில் வந்தவர் யார்? கார் எந்த வழியாக வந்தது. இந்த காரை பின் தொடர்ந்து யாராவது வாகனங்களில் வந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு, கோயில் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.  

போலீசார் பெரிய கடை வீதியில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில் வீதி, பி.கே செட்டி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மூடி சீல் வைத்தனர். கோவை நகரம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வட்டாரத்தில் உள்ள சுமார் 200 கடைகள் நேற்று மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக குன்னூர் அருகே ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்போன் ‌சிக்னல் கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து காண்பித்துள்ளது. அதன் அடிப்படையில் குன்னூருக்கு வந்த போலீசார் விசாரணைக்காக அவரை கோவைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

*பலியானவர் வீட்டில் வெடிபொருள் சிக்கியது: டிஜிபி பேட்டி

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:  கோவையில் நடைபெற்ற கார்  வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில்  உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா  முபின் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டை சோதனை செய்தபோது  அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டு உள்ளிட்ட  வெடி மருந்து பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

தடய அறிவியல் துறையினர்  தடயங்களைச் சேகரித்துள்ளனர். காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து  வந்த கார் 9 பேரிடம் இருந்து கைமாறி உள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது.  இவர் மீது முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. அவருடைய  செல்போன் தரவுகளை ஆராய்ந்து யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து  சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம். இவரிடம் கடந்த 2019ம்  ஆண்டு என்ஐஏ சோதனை நடத்தியிருந்தபோதும் வழக்கு எதுவும் பதிவு  செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனைச்சாவடி  இருந்ததால் ஒதுங்கி உள்ளார். அப்போதுதான் வெடிவிபத்து  நடந்துள்ளது.

எனினும் இது தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது குறி வைத்தபோது நடந்ததா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜமேஷா முபின் எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை. இந்த வழக்கின்  விசாரணையிலும் எந்த அமைப்பு பின்னணியும் இல்லை. இவர் தனிநபராக செயல்பட்டாரா? அல்லது வேறு திட்டங்கள் ஏதும் இருந்ததா? என விசாரணை நடைபெற்று வருகிறது.   கோவை மாநகர காவல்துறையே துரிதமாக செயல்பட்டு வருவதால் என்ஐஏ விசாரணை  தேவையில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.