கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இது விபத்தா, சதிச் செயலா? என்பது விசாரணை முடிவில் தெரியவரும் என்று, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேட்டில் பழமைவாய்ந்த சங்கமேஸ்வரர் (கோட்டை ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன.
இந்நிலையில், கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி ஒரு மாருதி கார் நேற்று அதிகாலை 4.10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள வேகத்தடை மீது கார் ஏறி இறங்கிய போது, திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் கார் தீப்பிடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து பார்த்தபோது, கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக, உக்கடம் போலீஸாருக்கும், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் இரு துண்டாக உடைந்து, உருக்குலைந்தது. காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், வடக்கு துணை ஆணையர் மதிவாணன் ஆகியோரும் வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
தடயவியல் துறையினர் அங்கு தடயங்களை சேகரித்தனர். காரில் வெடிபொருட்கள், வெடி மருந்துகள் ஏதாவது இருந்ததா என்று ஆய்வு செய்தனர். சிதறிக் கிடந்த கார் உதிரிபாகங்கள், சிலிண்டர்கள், பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் 2 மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், தகவல் அறிந்து, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். கோயிலை தகர்க்க சதி நடந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். விபத்து நடந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில், ஈஸ்வரன் கோயில் வீதியை தடுப்புகள் மூலம் போலீஸார் அடைத்தனர். கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்ததால் தீப்பிடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
இறந்தவர் வீட்டில் வெடிமருந்து பறிமுதல்: டிஜிபி தகவல்
கோவையில் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியது. காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் உயிரிழப்பு, வெடிபொருள் தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின்(25) என தெரியவந்தது. அவரது வீட்டை சோதனை செய்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மருந்துகள், ரசாயனப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை.
சிலிண்டர் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். அவர் எங்கு சென்றார் என்பது புலன் விசாரணையின் இறுதியில்தான் தெரியவரும். அவர் என்ன திட்டமிட்டிருந்தார் என்பதும் நமக்கு தெரியவில்லை. தற்கொலை தாக்குதலுக்கு வாய்ப்பு குறைவு. என்ஐஏ விசாரணை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு டிஜிபி கூறினார்.
உயிரிழந்த ஜமேஷா முபின், பழைய துணி வியாபாரம் செய்து வந்தவர். கடந்த 2019-ல் ஒரு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க திட்டமிட்டு நடந்த சதியா?
கோவையில் பழமையான சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் வெடி விபத்து நடந்த பகுதியில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலி குண்டுகள் ஆகியவற்றை முக்கிய தடயமாக தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக பதிவில் பழைய உரிமையாளர் பிரபாகரனின் பெயரை காட்டுகிறதே தவிர, தற்போதைய உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. தவிர, காரின் ‘இன்ஜின் சேஸ்’ எண் வேறு ஒருவரது பெயரில் உள்ளது. வெவ்வேறு கார்களின் உதிரிபாகங்களை இணைத்து இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல; திட்டமிட்ட சதிச்செயலாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க அல்லது பழமைவாய்ந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க இந்த சம்பவம் திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துள்ளது. சிலிண்டரில் இருந்து வாயு கசிந்தது மட்டுமே அதற்கு காரணமாக இருக்காது. காரில் வெடி மருந்தும் வைக்கப்பட்டு, பயங்கர தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பரவலாக பல இடங்களிலும் சிலிண்டர் வெடித்து விபத்துகள் நடக்கின்றன. அங்கு உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்துவார்கள். தற்போது நடந்துள்ள விபத்தில், டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்திருப்பதும், வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டதும் இந்த விபத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
‘‘6 தனிப்படைகள் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனுமானத்தின் பேரில் தற்போது எதுவும் கூற முடியாது. காரில் வெடி மருந்துகள் இருந்ததா என்பது தொடர்பான ஆய்வறிக்கைகள் வந்த பிறகே தெரியவரும்’’ என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த காரில் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா என்று தடயவியல் துறையினர் உன்னிப்பாக ஆய்வு செய்தனர். அதுபற்றிய விவரங்கள் முழுமையாக கிடைத்த பிறகே, இங்கு நடந்தது விபத்தா, சதிச்செயலா என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.