கால தாமதத்தால் 384 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.4.52 லட்சம் கோடி கூடுதல் செலவு: மத்திய அமைச்சக அறிக்கையில் தகவல்

திட்டங்களை நிறைவேற்றுவதில் காணப்பட்ட காலதாமதத்தால் 384 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.52 லட்சம் கோடிசெலவிடும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.150 கோடி மற்றும் அதற்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அந்தவகையில், வளர்ச்சிக்கு தீட்டப்பட்ட1,529 உள்கட்டமைப்பு திட்டங்களில் 662 திட்டங்களின் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, 1,529 திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ.21,25,851.67 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டங்களை முடிக்கும் தருவாயில் இதற்கான செலவினம் ரூ.25,78,197.18 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 384 உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ.4,52,345.51 கோடி செலவாகும் (முதலில் ஒதுக்கப்பட்ட தொகையில் இது 21.28 சதவீதம்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. 1529 உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 2022 செப்டம்பர் இறுதி நிலவரப்படி ரூ.13,78,142.29கோடி செலவிடப்பட்டுள்ளது. இது,மொத்த திட்ட செலவினத்தில் 53.45 சதவீதமாகும்.

காலதாமதமாக நடைபெற்று வரும் 662 திட்டங்களில், 133 திட்டங்கள் 1-12 மாதங்கள் வரையிலும், 124 திட்டங்கள் 13-24 மாதங்கள், 276 திட்டங்கள் 25-60 மாதங்கள், 129 திட்டங்கள் 61 மாதங்களுக்கும் மேலாக தாமதமாக பணிகள் நடைபெறக்கூடியவை. இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.