கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பம் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால், கடந்த 4 மாதமாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வீடுகளை காலி செய்து மக்கள் வெளியேறுகின்றனர்.
கிருஷ்ணகிரியில் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையோரம் பெத்தனப்பள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டேகுப்பம், டைட்டான் நகர், பாரீஸ் நகர் முதல் தமிழ்நாடு ஓட்டல் பின்புறம் வரை சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில், தண்டேகுப்பம் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால், தாங்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: தண்டேகுப்பம் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் 4 மாதங்களாக தேங்கியுள்ள மழை நீர் வெளியேற வழியில்லை. மழை நீர் வடிகால் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இங்குள்ள 200 குடியிருப்புகள், ஒரு அங்கன்வாடி மையத்தையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் சூழ்ந்த மழை நீரால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல, 2018-ம் ஆண்டு மழையின்போது ஒரு வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னரும் மழை நீர் வடிகால் அமைக்கவில்லை.
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனிடையே, எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாறையூர் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்கள் தொடர் மழை பெய்தால் ஏரி நிரம்பி, குடியிருப்பு பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
எனவே, எங்கள் பகுதியை ஆட்சியர் ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடைப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.