கேரளா | பதவியில் நீடிப்பதற்கான உரிமையை வரும் நவ. 3-க்குள் நிரூபிக்க துணைவேந்தர்களுக்கு கெடு – ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகத்தின் 9 துணைவேந்தர்களும் தாங்கள் பதவியில் தொடருவதற்கு உள்ள உரிமையை வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணிக்குள் 9 பல்கலை.யின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என்று கேரளா ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை கேரள உயர் நீதின்றத்தின் சிறப்பு அமர்வு மாலை 4 மணிக்கு விசாரணை செய்கிறது.

பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலை கழக துணைவேந்தர்களையும் இன்று(அக். 24) காலை 11.30 மணிக்குள் பதவி விலகுமாறு ஆளுநர் நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கேரள பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கன்னூர் பல்கலைக்கழகம், ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீசங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் ஆகிய 9 பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களும் திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணிக்குள் பதவி விலக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவினை எதிர்த்து துணைவேவந்தர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், ஆளுநரின் இந்த செயல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “துணைவேந்தர்கள் யாரும் பதவி விலக வேண்டாம். துணைவேந்தர்களை பதவி விலகச்சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. துணைவேந்தர்களை நியமித்தது ஆளுநரே. அந்த நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் அதற்கும் ஆளுநர்தான் பொறுப்பு. ஆளுநரின் இந்த செயல் அசாதாரணமானது. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஆளுநர் அவற்றின் மீது போர் தொடுத்துள்ளார். ஜனநாயகத்தை மதிக்கும் யாரும் இதுபோன்ற போக்குகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

ஆளுநரின் முடிவை எதிர்த்து துணைவேந்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். அதில், “துணைவேந்தர் பதவியில் நீடிப்பதற்கு தங்களுக்கு உள்ள உரிமையை 9 துணைவேந்தர்களும் வரும் நவம்பர் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும். அவர்களது நியமனம் சட்டவிரோதமானது அல்ல என அவர்கள் நிரூபிக்க வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என கேரள ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.