கேரள சிபிஐஎம் அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம்: ‘என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்…’ என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரளாவில் ஆளும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். 3 மூத்த CPI(M) தலைவர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை, மாநிலத்தில் உள்ள LDF அரசு நிராகரித்தது. ஆனால், இடதுசாரி முன்னணி எப்போதும் தனது உறுப்பினர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறது என்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், முன்னாள் சிபிஐஎம் அமைச்சர்கள் பாலியல் ரீதியான சலுகைகளைப் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இவரது சமீபத்திய குற்றச்சாட்டுகள் மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சட்டசபை முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் ஆகியோர் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார் அளித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகத்தின் செயலாளராக செயல்பட்டபோது, இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார். அதே நேரத்தில், இந்த மூன்று உயர்மட்ட சிபிஐ(எம்) தலைவர்களும், கேரளாவில் முந்தைய பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்வப்னா சுரேஷ், “முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தேவசம்பந்தன் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள். இது தொடர்பாக அவர்கள் என்னை அணுகினர். அவர் தொலைபேசியிலும் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டார். நேருக்கு நேர், இப்படி நடந்து கொண்டார்கள், இப்படிப்பட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் அழகானதா?” என்று தெரிவித்தார்.

 “அப்போதைய நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்கும், என்னை உடலுறவுக்கு அழைத்தார். என்னைப் பொறுத்தவரை, அவர் மறைமுகமாகவும் என்னை உடலுறவுக்கு பலமுறை அழைத்தார். மற்ற இருவரும் மிகவும் நேரடியாகவே என்னை பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ள தூண்டினார்கள்” என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசாங்கம் மூன்று மூத்த சிபிஐ(எம்) தலைவர்களுக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தாலும், இந்த விவகாரம், பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய, சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர்கள், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் புதிய குற்றச்சாட்டுகள் “அடிப்படையற்றவை” என்று தெரிவித்தனர். எனவே, அவர்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, கடந்த காலங்களிலும் ஸ்வப்னா சுரேஷ் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார், அதன் தொடர்ச்சிதான் இது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.