கோலிவுட் ஸ்பைடர்

கமல் இப்போது ‘பிக்பாஸ்’ தவிர, ‘இந்தியன்2’ படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் வரும் அவரது பிறந்தநாளில், அவருக்கு பிறந்த நாள் பரிசாக ‘இந்தியன்2’வின் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார் ஷங்கர். ‘இந்தியன்2’ படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் வரை நீளும் என்ற பேச்சு இருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் ஏப்ரலுக்கு மேல் நீண்டால், ஆகஸ்ட்டில் படத்தைக் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். இன்னொரு தகவல், கமல் அடுத்து ‘விஸ்வரூபம்2’ எடிட்டர் மகேஷ் நாராயண் படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த முடிவையும் அவர் இப்போது தள்ளிவைத்திருக்கிறார். அடுத்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்தைத் துவங்குவதுடன், அதில் நடித்துக் கொண்டே மகேஷ் நாராயண் படத்தையும் முடித்துவிடலாம் என்ற யோசனையும் கமலுக்கு இருக்கிறது என்கிறார்கள். ஆக, கமல் பிறந்தநாளில் பல பரிசுகளை அறிவிக்கலாம்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு சென்னை, கடலூர் என பல இடங்களில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே ரஜினி தன் அடுத்த படத்திற்கான கதைகளையும் கேட்டு வருகிறார். அடுத்து அவர் லைகா தயாரிப்பில் ‘டான்’ சிபிசக்கரவர்த்தி படம் பண்ணுவதுடன், கூடவே ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் எண்ணத்திலும் இருக்கிறார் என்கிறார்கள். தெலுங்கில் சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற படம், ‘பிம்பிசாரா’. அதில் நந்தமூரி கல்யாண்ராம் நடித்திருந்தார். அதனை இயக்கிய மல்லிடி வசிஷ்ட்டா ‘ஜெயிலர்’ ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்து, கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். பவுண்டட் ஸ்கிப்ட் ஆகவும் கதையை அவர் வைத்திருந்தார் என்கிறார்கள். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல கோலிவுட் ஹீரோக்கள் இப்போது டோலிவுட் டைரக்டர்களின் இயக்கத்தில் நடிப்பதுதான் புது டிரெண்ட். ரஜினியும் இந்த அப்டேட்டில் இருக்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் காட்சி திருட்டுத்தனமாக லீக் ஆனதில், கோபத்தின் எல்லைக்கே போய்விட்டாராம் விஜய். இணையதளத்தில் வெளியான அந்தப் பாடல் கிளிப் டாப் ஆங்கிளாக இருப்பதால் அதை எடுத்தவர்கள் நிச்சயமாக லைட்டிங் செட் செய்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றும், அவர்களில் ஒருவர்தான் மொபைலில் ஷூட் செய்து லீக் ஆக்கியிருக்க வேண்டும் என விஜய் கணித்து விட்டாராம். இயக்குநரும் ஹீரோவின் கணிப்பு சரிதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘வாரிசு’ யூனிட்டில் உள்ள அத்தனை பேரையும் பிடித்து, படப்பிடிப்பில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி சோதனையிட்டு வருகிறார்கள். இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனவாம். யூனிட் ஆளாக இருந்தாலும் அவரது மொபைல் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே தளத்திற்குள் அனுமதிக்கிறார்களாம்.

ஓவியா பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் இருக்கிறார். ‘பிக்பாஸ்’ ரசிகர்கள் இன்னும் அவரை விரும்பி கலைநிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்கா வரை போனவர், அந்த நாடு மிகவும் பிடித்துப் போய் அங்கேயே செட்டில் ஆகிவிடலாமா என யோசிக்கிறார். அவரது கைவசமிருந்த ஒரு படத்தையும் முடித்துவிட்டு அமெரிக்க பறக்கவும் திட்டமிட்டுள்ளார்.

முன்பு அனிருத், சிவகார்த்தி, தனுஷ் என்றொரு கூட்டணி இருந்தது. ஆளாளுக்கு பிஸியாகி போய்விட நடுவில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகளும் வந்துவிட பிரிந்தனர். எங்காவது சந்தித்துக் கொண்டால் ‘ஹலோ’ சொல்லிவிட்டு நலம் விசாரிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது. இப்போது மூன்று பேரும் சந்தித்து மனவேறுபாடுகளைப் பேசி களைந்து கொண்டார்கள். இனி மாதம் ஒருமுறை ஸ்டூடியோவில் அல்லது வெளியில் எங்காவது சந்திக்கலாம் என தீர்மானித்திருக்கிறார்கள். தீபாவளி பரபரப்பு முடிந்த பிறகு மும்பை வரைக்குமே போய், இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் ட்ரிப் அடிக்க உள்ளனர். டிக்கெட் முதற்கொண்டு பயணம் உறுதியாகிவிட்டது. மூவரும் ஒரு படத்தில் இணைவதையும் இந்தப் பயணம் சாத்தியப்படுத்தும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.