கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்து இருக்க கூடும் என சந்தேகித்தனர்.
கோவையில் வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் நான்கு பேரிடம் கை மாறி இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் கடந்த 11 மணி நேரமாக கார் வெடித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னையிலிருந்து விமான மூலம் கோவைக்கு விரைந்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர் ஆய்வினை மேற்கொண்டார். பிறகு செய்தியாளர் சந்தித்த அவர் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடவியல் நிறுவனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியானது கோவை மாவட்டம் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தற்பொழுது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் தற்பொழுது பழைய துணி வியாபாரம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.