கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்து இருக்க கூடும் என சந்தேகித்தனர். இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியானது கோவை மாவட்டம் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தற்பொழுது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு “ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என தற்போது தெரியவந்துள்ளது. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஜமேசா முபின் மனித வெடிகுண்டாக செயல்பட்ட முற்பட்டாரா என்பது குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இவர் மீது ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பு விசாரணை நடத்தி உள்ளது. ஜமேசா முபினிடம் 2019ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 269 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் விசாரணை செய்யப்பட்டவர் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தேசிய பாதுகாப்பு முகமை விசாரணை தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.