கோவை சம்பவத்தில் கடுமையான தண்டனை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜமேஷா முபின் இல்லத்தில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவை சம்பவத்தின் பின்னணியில் இருப்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவை உக்கடம் பகுதியில் நேற்று (அக்.23) அதிகாலை 4.30 மணியளவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது. காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

இது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும். இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருந்திட வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன் பின்னணியில் ஏதேனும் தீவிரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவுகளாய்ப் பிணைந்து இணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது. பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.

தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் வதந்திகளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்றிட வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.